கடலூர் ஜன, 12
கொரோனா காலத்தில் பணியாற்றுவதற்காக மருத்துவ தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்தி கடலூர் மாவட்டத்தில் 72 செவிலியர்கள் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டனர். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 31- ம் தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து மனு அளித்தனர்.