விழுப்புரம் ஜன, 10
விழுப்புரம் பணி நிரந்தரம் தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் கடந்த 2 ஆண்டுகள் 7 மாதம் பணியாற்றிய நிலையில் கடந்த டிசம்பர் 31 ம் தேதி முதல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அரசு பிறப்பித்த அந்த பணிநீக்க அரசாணையை மறுபரிசீலனை செய்து மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றும், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும் ஒப்பந்த செவிலியர்கள் கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தின் 9-வது நாளாக நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையங்கள் மூலமாக அரசுக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தின் முன்பு 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திரண்டு, தங்களை பணி நிரந்தரம் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களது பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் தங்களது கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வலியுறுத்தி அஞ்சல் மூலம் அனுப்பி வைத்தனர்.