அரியலூர் ஜன, 1
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தக்கோரியும், அந்த மருத்துவமனைக்கு புதிதாக வேறொரு இடத்தை தேர்வு செய்து, அதனை விரிவாக்கம் செய்து அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டிடம் கட்ட வேண்டும். ஒப்பந்த முறையை கைவிட்டு பிரேத பரிசோதனை செய்ய கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் துரைராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். முன்னதாக மாவட்ட செயலாளர் மணிவேல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாதர் சங்க மாவட்ட தலைவர் பத்மாவதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.