திண்டுக்கல் டிச, 27
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது விடுமுறை என்பதாலும், சபரிமலை சீசன் என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக அங்குள்ள பிரசாதமான பஞ்சாமிர்தத்தை வாங்கிச்செல்வது வழக்கம். இதற்காக மலைக்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் பிரசாத ஸ்டால்கள் உள்ளன. பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நேற்று இரவு முதலே பஞ்சாமிர்தம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
அனைத்து ஸ்டால்களிலும் பஞ்சாமிர்தம் தீர்ந்து விட்டதால் இதனை வாங்க வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். ஓரிரு நாட்களில் பஞ்சாமிர்தம் தயாரித்து அனைத்து ஸ்டால்களிலும் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரும் காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் அதற்கு முன்பாக தட்டுப்பாடின்றி பஞ்சாமிர்தம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.