சென்னை ஆகஸ்ட், 10
நடிகர் கார்த்தி சினிமாவை தாண்டி உழவன் அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு உதவி வருகிறார். இந்த நிலையில் சேதமடைந்த அரசு பள்ளியொன்றையும் சீரமைத்து கொடுத்துள்ளார்.
இதுகுறித்து கார்த்தி நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ”நான் விருமன் படப்பிடிப்பில் இருந்தபோது வயதான சிலர் வந்து என்னை சந்தித்தனர். பக்கத்தில் ஒரு பள்ளி இருக்கிறது. வந்து பாருங்கள் என்று அழைத்தனர். அந்த பள்ளியை பார்த்தபோது சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதை சீரமைத்து கொடுக்க முடிவு செய்தேன். அகரம் மற்றும் அங்குள்ள சிலர் உதவியோடு பல லட்சம் ரூபாய் செலவில் அந்த பள்ளியை சீரமைத்தோம். அதன் பிறகு அந்த பள்ளியில் அதிக குழந்தைகள் படிக்க வருகிறார்கள்.
மேலும் வசதி உள்ளவர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள சிதிலமடைந்த பள்ளிகளை சீரமைப்பதற்கு உதவ முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.