அரியலூர் டிச, 18
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எம்.ஆர்.பி.செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி எம்.ஆர்.பி.செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். முறையான போட்டித் தேர்வின் மூலம் தேர்வு செய்தும், 7 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதிய முறையில் பணி செய்யும் செவிலியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஐபிஎச்எஸ் மற்றும் எம்சிஐ பரிந்துரையின் படி நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு, கோரிக்கை மனுக்களை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூங்கோதையிடம் வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராகவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் மகேஸ்வரி கோரிக்கை குறித்து விளக்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன், மாவட்டச் செயலர் என்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.