செங்கல்பட்டு டிச, 16
சபரிமலை சீசன் தற்போது தொடங்கி உள்ளதால் கேரளாவில் இளநீர் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் இருந்து வரும் இளநீரை பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்களும் அதிகளவில் விரும்புகின்றனர். இதனால் பொள்ளாச்சி இளநீர் தேவை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட கூடுதலாக இளநீர் அனுப்பப்பட்டு வருகிறது. கேரளாவுக்கு நாள் ஒன்றுக்கு 1 லட்சம் வரையிலான இளநீர் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் இளநீரே அனுப்பப்பட்டது.
இந்த ஆண்டில் உற்பத்தி அதிகரிப்பால் குறைவான விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வரும் ஜனவரி மாதம் வரை இளநீர் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரிப்பதுடன், அதன் விலை சரிவு ஏற்படும் என்றும், இளநீர் தேக்கத்தை தவிர்க்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் இளநீர் அனுப்பும் பணி தீவிரமாக நடப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.