பெங்களூரு டிச, 4
ஆம் ஆத்மி கட்சியின் கர்நாடக மாநில தலைவர் மோகன் தாசரி கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சி அரசியல் செய்ய வரவில்லை. மாறாக அரசியல் மாற்றத்திற்காக வந்துள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் வளர்ச்சியை காணவேண்டும் என்பதே ஆம் ஆத்மி கட்சியின் நோக்கம்.
டெல்லி, பஞ்சாப்பில் சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறோம். டெல்லியில் வெளிப்படை தன்மையுடன் ஆட்சி நடந்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கான வளர்ச்சி திட்டம் 300 யூனிட் இலவச மின்சாரம், சுகாதாரம் ஆகிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் நடந்த அரியானா மாநில மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 2-வது இடம் கிடைத்தது. கோவா சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. குஜராத்தில் தேர்தல் நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அதேபோல கர்நாடகத்திலும் மாற்றம் தேவை.
பா.ஜனதாவிற்கு மாற்று கட்சிக்காகத்தான் ஆம் ஆத்மியை முன் நிறுத்துகிறோம். இந்த முறை 170 முதல் 180 இடங்ளில் வேட்பாளர்களை நிறுத்த இருக்கிறோம். இதில் ஆம் ஆத்மிக்கு பெரும்பாலான இடங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.