மும்பை நவ, 27
விக்ரம் கோகலே கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடித்தவர் விக்ரம் கோகலே. பழம்பெரும் இந்தி மற்றும் மராத்தி பட நடிகரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் விக்ரம் கோகலே சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 77. நடிகர் விக்ரம் கோகலே 2010-ம் ஆண்டு அனுமதி என்ற மராத்தி படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர். விக்ரம் கோகலேவின் மறைவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் நடிகர்கள் அக்ஷய்குமார், அனுபம் கேர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.