ஈரோடு நவ, 26
தமிழகத்தின் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றது முதல் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி வருகிறார். அதன்படி மின் கட்டணம் இல்லாமல் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு வழங்கும் வகையில் ஏற்கனவே மாநிலம் முழுவதும் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டது.
இதில் ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில் 1,187 விவசாயிகளும், கோபி மின்பகிர்மான வட்டத்தில் 2,105 விவசாயிகளும் மின்சார இணைப்பு பெற்று உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் கரூரில் நடந்த அரசு விழாவில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளின் நிலங்களுக்கு மின் கட்டணம் இல்லாத மின்சார இணைப்புகள் வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தில் ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட 1,143 பேருக்கும், கோபி மின் பகிர்மான வட்டத்தில் 1,711 பேருக்கும் என மாவட்டத்தில் மொத்தம் 2,854 பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த திட்டத்தில் மின் இணைப்புகள் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.