சென்னை நவ 20
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மேற்கொள்ளவும் பேரிடர் தடுப்பு பணிகளை தயார்படுத்தவும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாக ஆணையர் பிரபாகர் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். வானிலை மையத்தின் முன் அறிவிப்பு எச்சரிக்கையின்படி 20, 21, 22 ஆகிய தேதிகளில் கனமழை, மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் பேரிடர் முன் எச்சரிக்கைக்கான தடுப்பு பணிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கனமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட நிர்வாகமும் எடுக்க வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டு உள்ளது.
