புதுச்சேரி நவ, 15
புதுவை அரசின் கல்வித்துறை சார்பில் மாணவர்கள் நாள் விழா காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்று பல்வேறு போட்டிகள், அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
நினைத்த கல்விக்கு வாய்ப்பு கிடைக்காதபோது மாணவர்கள் சோர்வடையக்கூடாது. கிடைத்த கல்வியில் முழுமையாக கவனம் செலுத்தி படித்து முன்னேற வேண்டும். வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு பணிக்காக மட்டும் கல்வி இல்லை. அறிவை வளர்த்துக் கொள்ளவும் கல்வி தேவை. நிர்வாக பதவிகளில் தற்போது உள்ள பலர் கலை கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள்தான். கலை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நிர்வாக பதவிக்கு தங்களை தயார்படுத்த வேண்டும்.
ஒரே சிந்தனையோடு மாணவர்கள் படிக்க வேண்டும். தங்களின் பள்ளிக்கும், பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை தேடித்தர வேண்டும். நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் மீண்டும் அரசு செயல்படுத்தும். பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க உள்ளோம். 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓரிரு மாதங்களில் மடி கணிணி வழங்கப்படும் என அவர் பேசினார்.
விழாவில் இணை இயக்குனர் சிவகாமி வரவேற்றார். பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.