திண்டுக்கல் நவ, 12
திண்டுக்கல் அருகிலுள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமோனோர் பங்கேற்றனர்.
முன்னதாக, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 பாகங்களைக் கொண்ட பொன்னியின் செல்வன் நூலின் ஆங்கில பதிப்பை வழங்கி வரவேற்றார்.
விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்புகளை பயின்ற 2,314 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு பிரதமர் மோடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, பெரியகருப்பன், கீதாஜீவன், மனோ தங்கராஜ், தலைமை செயலாளர் இறையன்பு, பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, சட்ட மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், காந்திராஜன், காந்தி, சரசுவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.