நெல்லை அக், 24
நெல்லைமாவட்டம் பணகுடி கன்னிமாரா ஓடையில் வெள்ளத்தில் சிக்கி கரை சேர முடியாமல் தவித்த 15 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
தமிழகம் முழுவதும் பருவமழை பரவலாக தொடங்கி பெய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் பணகுடி கன்னிமாரா ஒடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், பணகுடி கன்னிமாரா ஒடையில் குளிப்பதற்காக சென்ற 4 பேர் மற்றும் தோட்ட வேலைக்கு மற்றும் விவசாய பணிக்கு 15க்கும் மேற்பட்டோர் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது குத்திர பாஞ்சான் அருவி ஒட்டிய கன்னிமாரா ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் நீர் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் எதிர் கரையில் 15க்கும் மேற்பட்டோர் ஓடை வெள்ளத்தில் சிக்கி தவித்தனர்.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து வள்ளியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பணகுடி காவல்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் வள்ளியூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெள்ளத்தில் சிக்கிய 15 பேரையும் கயிறு கட்டி பத்திரமாக மீட்டு கரைக்க கொண்டு வந்தனர். ஓடை வெள்ளத்தில் சிக்கிய 15 பேரை மீட்ட தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.