திருவள்ளூர் அக், 22
திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் 8.48 ஏக்கர் பரப்பளவில், ரூ.308.14 கோடி மதிப்பில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 7 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், 84 உள்ளிருப்பு மருத்துவர்கள், 114 பயிற்சி மருத்துவர்கள், 68 செவிலியர்கள் தங்கும் குடியிருப்பு மற்றும் விடுதிகள் ஆகியவை அமைக்கும் பணி நடைபெற்று வந்தன. அப்பணி சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, 500 படுக்கைகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, அதிதீவிர சிகிச்சை, விபத்து மற்றும் அவரச சிகிச்சை, முடநீக்கியல் உள்ளிட்ட 18 பிரிவுகளுடன் கூடிய இந்த புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்து, மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார்.