புதுச்சேரி அக், 15
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தரமானதாகவும், விலையேற்றமின்றி மலிவாக கிடைக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுவை அரசின் கூட்டுறவு நுகர்வோர் இணையம் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய மக்கள் மளிகை சிறப்பங்காடி புதுவையில் 5 இடங்களில் நடத்தப்படுகிறது.
புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள கான்பெட் வளாகம், வில்லியனூர் கோபாலசாமி நாயக்கர் திருமண நிலையம், அரியாங்குப்பம் பாண்டுரங்கா திருமண நிலையம், திருக்கனூர் விஜய் திருமண மஹால், பாகூர் விவசாய சேவை கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களில் இந்த மக்கள் மளிகை சிறப்பங்காடி நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மக்கள் மளிகை சிறப்பங்காடியை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை செயலாளர் நெடுஞ்செழியன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தய்யா, இணை பதிவாளர் ராகிணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.