நெல்லை அக், 11
நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை அடுத்த வேப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் சிங். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சென்னையில் லாரி ஓட்டுனராக அவர் வேலை பார்த்து வந்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு 2 கால்களும் பாதிக்கப்பட்டது.
இதனால் சென்னை தனியார் மருத்துவமனை மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இடுப்புக்கு கீழ் செல்லக்கூடிய ரத்த நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் இதனை சரி செய்வது கடினம் என கைவிரித்தனர்.
இதனால் உடல் உபாதைகளை கூட படுத்த படுக்கையிலேயே பல மாதங்களாக அவர் கழித்து வந்துள்ளார். படுத்த படுக்கையாக இருந்த அவருக்கு தற்போது எழுந்து உட்காரும் அளவிற்கு உடல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது வருமானத்தில் தான் அவர்களது குடும்பம் ஓடி வந்துள்ளது. தற்போது அவரது முடக்கத்தால் மொத்த குடும்பமும் நிலை தடுமாறி உள்ளது. அவரது 2 மகள்களின் படிப்பு, குடும்பத்தின் அன்றாட செலவு உள்ளிட்ட எதற்கும் போதிய வருவாய் இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, கவிதா வைத்துள்ள தையல் எந்திரம் மூலம் அப்பகுதியை சுற்றியுள்ள நபர்களிடமிருந்து பெறக்கூடிய சிறிய சிறிய துணிகளை தைத்து கொடுத்து குடும்பத்தின் அன்றாட தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
மேலும் அவர்களது மூத்த மகள் 7-ம் வகுப்பும், 2-வது மகள் 3-ம் வகுப்பும் படித்து வரும் நிலையில் அந்த குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்ய முடியாத நிலைக்கு குடும்பம் தள்ளப்பட்டுள்ளது. வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது வளர்ந்து வரும் நவீன காலத்தில் இது போன்ற பல்வேறு மருத்துவ சிக்கல்கள் இருப்பவர்களுக்கும் தகுந்த மருத்துவம் வழங்கி அவர்களையும் சாதாரண மனிதர்களை போல செயல்பட வைக்கும் நிலையில் தனது கணவருக்கும் நவீன சிகிச்சை அளிக்க தமிழக அரசும், நெல்லை மாவட்ட நிர்வாகமும் உரிய உதவியை செய்து தர வேண்டும் என்று கவிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கவனிக்கும் வகையில் தான் படித்த படிப்பிற்கு ஏற்றவாறு சிறிய அளவிலான கைத்தொழில் செய்வதற்கும் உதவி செய்திட வேண்டும் எனவும் கவிதா கோரிக்கை வைத்துள்ளார்.
