புதுச்சேரி அக், 9
முதலியார்பேட்டை தொகுதி திமுக சட்ட மன்ற உறுப்பினர் சம்பத், குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்.சரவணன்குமாரை சந்தித்து கொடுத்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பாப்ஸ்கோ மூலம் தீபாவளி சிறப்பு அங்காடி திறக்கப்பட்டது. அப்போது அனைத்து பகுதி மக்களும் தட்டாஞ்சாவடியில் செயல்பட்ட அங்காடிக்கு வரவேண்டி இருந்தது. இதனால் பொருட்செலவு, போக்குவரத்து நெரிசல் என மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். அப்போது தீபாவளி சிறப்பங்காடியை 5 இடங்களில் அமைக்கவேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன். எனது கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு திருக்கனூர் பகுதியில் சிறப்பங்காடி செயல்பட நடவடிக்கை எடுத்த முதலமைச்சர், குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இதன் மூலம் மேற்கு பிராந்தியத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறுவார்கள். ஆனால் தெற்கு பிராந்தியத்தில் உள்ள மக்கள் அனைவரும் தட்டாஞ்சாவடிக்கு வரவேண்டி உள்ளது. இதனால் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமத்துக்கு ஆளாவார்கள். முதலியார்பேட்டை ரோடியர் மில் வளாகத்தில் காலியிடமும், குடோன் வசதியும் உள்ளது. சிறப்பு அங்காடி நடத்த தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது. எனவே இங்கு ஒரு தீபாவளி சிறப்பங்காடி திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.