நெல்லை ஆகஸ்ட், 3
நெல்லை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
நெல்லை எஸ்.என்.ஹைரோடு வியாபாரிகள் சங்கத்தினர் தலையில் கருப்பு துண்டு போட்டுக் கொண்டும், சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்து கொண்டும் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்.என்.ஹைரோடு, தச்சநல்லூர்-ஊருடையார்புரம் சாலையில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.
கடந்த 2 ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் சாலைகளை தோண்டி போட்டுள்ளனர். இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. புதிய சாலைகளை அமைக்காமல் அரசு ஒப்பந்தக் காரர்களும், மாநகராட்சி அதிகாரிகளும் அலட்சியமாக இருந்ததன் விளைவாக கடந்த 2 வருடங்களாக வியாபாரம் இல்லாமல் எங்களின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
அரசுக்கு செலுத்த கூடிய வரிக்கு கூட கடன் வாங்கும் சூழ்நிலைக்கு வணிகர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது எங்களுக்கு பெரும் மனஉளைச்சலையும், அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்யமுடியாத சூழ்நிலையையும் ஏற்படுத்தி உள்ளது.வணிகர்களின் இத்தகைய சூழ்நிலையில் எங்களிடம் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
ஆகவே மேயர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொரோனாவில் இருந்து மீண்ட எங்களை ஸ்மாாட் சிட்டி திட்ட சாலைகள் என்ற சவக்குழிக்குள் தள்ள முயற்சிக்கும் நிலையிலிருந்து காப்பாற்ற வேண்டும். உடனடியாக போர்கால நடவடிக்கையில் எஸ்.என்.ஹைரோடு, தச்சநல்லூர், ஊருடையார்புரம் சாலைப் பணிகளை முடித்து தரவேண்டும் என அதில் கூறியிருந்தனர்.