வேலூர் அக், 5
தமிழக விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் ரங்காபுரத்தில் உள்ள வேலூர் மண்டல வனத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் உதயகுமார், அமைப்பாளர் ராமதாஸ், துணைத்தலைவர் அரிமூர்த்தி, போராட்டக்குழு தலைவர் ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள விவசாயிகள் மீதுள்ள வழக்கை எந்த நிபந்தனையும் இன்றி ரத்து செய்ய வேண்டும். பொய் வழக்கு பதிவு செய்த அலுவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு பல மடங்கு உயர்த்தி வழங்குவதோடு இழப்பீட்டை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும். உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
மேலும் ஆர்ப்பாட்டத்தையொட்டி வேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.