மயிலாடுதுறை செப், 26
மணல்மேடு பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. அதற்கான அறுவடை பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. அறுவடையான வயல்களில் தாளடி பணிகள் தொடங்கியுள்ளது. குறுவை அறுவடை பணிகள் முடிந்த பல வயல்களில் எந்திரம் மூலம் வைக்கோல் சுற்றப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஏக்கர் ஒன்றுக்கு 45 கட்டுகள் வரை வைக்கோல் கிடைக்கும். கடந்த ஆண்டு வெளிமாவட்ட வியாபாரிகள் வந்து வைக்கோலை நாங்களே எந்திரம் மூலம் சுற்றிக் கொள்கிறோம். கட்டு ஒன்றுக்கு ரூ.100 தருகிறோம் என்று கூறி எடுத்துச் சென்றார்கள்.
அதேபோல இந்த ஆண்டும் வெளிமாவட்ட வியாபாரிகள் வைக்கோலை வாங்குவதற்கு வயல்களுக்கு வந்தனர். ஆனால் அவர்கள் கட்டு ஒன்றுக்கு ரூ.20 மட்டுமே கொடுக்கப்படும் என்று விவசாயிகளிடம் கூறுவதாக தெரிகிறது. இதனால், வேதனை அடைந்த விவசாயிகள் அடிமாட்டு விலைக்கு தர இயலாது என்று கொடுக்க மறுத்து விடுகின்றனர். மேலும், அந்த வைக்கோலை தங்களது வயலிலேயே பரப்பி வயலில் தண்ணீர் தெளித்து அதன்மீது குறிப்பிட்ட அளவு யூரியாவை போட்டு வைக்கோலை மட்கச் செய்து உரமாக்கி வருகின்றனர்.