ஈரோடு செப், 26
பவானி கூடுதுறை தமிழகத்தில் உள்ள முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக பவானி கூடுதுறை உள்ளது. அங்கு காவிரி ஆறு, பவானி ஆறு, கண்களுக்கு புலப்படாத அமுத நதி ஆகிய 3 ஆறுகளும் சங்கமிக்கும் தலமாக விளங்குகிறது. பரிகார தலமாக இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பவானி கூடுதுறைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து புனித நீராடிவிட்டு சங்கமேஸ்வரரை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். அமாவாசை தினங்களில் பவானி கூடுதுறைக்கு பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
மேலும் குறிப்பாக தமிழ் மாதங்களில் தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனால் மகாளய அமாவாசையின்போது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வருவது வழக்கம். இந்தநிலையில் புரட்டாசி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கூடுதுறையில் உள்ள பரிகார மண்டபங்களில்புரோகிதர்கள் திதி, தர்ப்பணம் செய்வதற்காக தயாராக இருந்தனர். கூடுதுறைக்கு வந்த பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர். அப்போது தங்களது முன்னோர்களை நினைத்து திதி கொடுத்த பக்தர்கள் கூடுதுறையில் தண்ணீரில் இறங்கி பிண்டங்களை விட்டனர்.
இதனால் நேரம் செல்லசெல்ல பக்தர்களின் கூட்டம் அதிகமாகி கொண்டே இருந்தது. கூடுதுறையில் பரிகார மண்டபங்களில் பக்தர்களின் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாகவே காணப்பட்டது.