சிவகங்கை செப், 24
சிங்கம்புணரி, ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு சிங்கம்புணரி பகுதியில் பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொரி தயாரிக்கும் பணி தென் தமிழகத்தில் பொரி தயாரிப்பில் சிங்கம்புணரிக்கு பெரும் பங்கு உண்டு. இப்பகுதியில் தயாராகும் பொரி இனிப்பு கலந்த சுவையோடு மொறு மொறு தன்மையுடன் இருப்பதால் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இவை சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதேபோல வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து பொரி தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விழாவை முன்னிட்டு பெருமளவில் பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக இரண்டு ஷிப்ட் முறைகளில் சிங்கம்புணரி பகுதியில் பொரி தயாரிக்கும் பணியில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.