திருவாரூர் செப், 12
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூற்றம் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறிப்பிட்ட காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக ஆழ்குழாய் கிணறு அமைக்க கடனுதவி பெற்ற 9 விவசாயிகளுக்கு மானியமாக ரூபாய் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பின்னர் 8 பயனாளிகளுக்கு ரூ.26 ஆயிரத்து 274 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களும், 2 பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரத்து 36 மதிப்பிலான விலையில்லா சலவைப் பெட்டியும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.