விருதுநகர் ஆகஸ்ட், 1
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள பறவை அன்னம் காத்தருளிய சுவாமி கோயிலில் உள்ள கல்வெட்டுகளை வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அடுத்த பகுதியில் பறவை அன்னம் காத்தருளிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலை வரலாற்றுக்கள ஆராய்ச்சியாளர் டாக்டர் வெங்கடேஷ், ராஜபாளையம் நகராட்சி ஆணையர்பார்த்தசாரதி முயற்சியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கி.பி., 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் 12ம் நுாற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள சுவாமி விக்ரகம் ஏற்கனவே உள்ள பாழடைந்த மண்டபத்தில் இருந்து பாதுகாப்பு காரணம் கருதி புதிய மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கன்னிமூல திசையில் இருந்த கணபதி தற்போது சிவன் உள்ள கருவறையில் வைக்கப்பட்டுள்ளார். முருகன் இதர சன்னதிகளும் பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன. பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் கோயில் கல்வெட்டு பொறிக்கப்பட்ட கற்கள் உள்ளதை அதன் பழமை கருதி அரசு தொல்லியல் துறை மூலம் மீள் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும், என தொல்லியல் ஆர்வலர்கள் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.