மதுரை பிப்,13
மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் முன்பாக நக்கீரர் நுழைவு தோரண வாயில் அமைந்துள்ளது. இந்த தோரண வாயில் வழியாக மட்டுமல்லாமல், வாயிலுக்கு இரு புறங்களிலும் உள்ள சாலையோரங்களிலும் வாகனங்கள் முந்தி செல்கின்றன. இதனால் விபத்துகள் அதிகரிப்பதோடு, போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
இதன் காரணமாக நுழைவு வாயிலை அடுத்த 6 மாதங்களில் அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த செப்டம்பர் மாதத்தில் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் வகையில் நேற்று நள்ளிரவு போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாட்டுத்தாவணி நுழைவு வாயில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பொக்லைன் மூலமாக தோரண வாயிலை இடிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றன. அப்போது இரு பக்கங்களின் பேஸ்மெண்ட்டை இரு இயந்திரங்கள் மூலமாக இடிக்கும் பணிகள் நடைபெற்றது. பேஸ்மெண்ட் கொஞ்சம் வலுவிழந்த பின், தோரண வாயில் அப்படியே கீழே சரிந்து விழுந்தது. எதிர்பாராத வகையில் பொக்லைன் இயந்திரம் மீது தோரண வாயில் விழுந்தது.
இதில் சம்பக்குளம் பகுதியைச் சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் நாகலிங்கம் மீது தூண் விழுந்தது. இன்னொரு பக்கம் ஒப்பந்தத்தாரரான சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த நல்லதம்பியும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். இதன்பின் உடனடியாக அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்