தேனி ஏப்ரல், 1
லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரித்தார்.
தற்போதைய லோக்சபா தேர்தல் களத்தில் தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி, தென் சென்னையில் தமிழச்சி தங்க பாண்டியன், தமிழிசை சவுந்தரராஜன், கரூரில் ஜோதிமணி என பெண் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்களுடன் ஜோதியில் இணைந்திருப்பவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மனைவி அனுராதா.
தேனி தொகுதியில் நேற்று டிடிவி தினகரனுக்காக மக்களிடம் வாக்கு சேகரித்தார் அனுராதா. அப்போது, என்னை யார் என தெரிகிறதா? மக்கள் செல்வர் டிடிவி தினகரனின் மனைவிதான் நான்.. தினகரனின் சின்னம் எது தெரியுமா? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டபடியே அனுராதா தினகரன் பிரசாரம் செய்தார். அனுராதா அரசியல் களத்தில் புதியவர் என்றாலும் அவரது பிரசார வியூகம் தேனி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனின் அமமுக, பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இத்தொகுதியில் டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுபவர் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வன். டிடிவி தினகரன், அதிமுகவில் கலகக் குரல் எழுப்பிய போது அவருக்கு வலது கரமாக இருந்தவர் தங்க தமிழ்ச் செல்வன். இதே தேனி தொகுதி, பெரியகுளம் தொகுதியாக முன்னர் இருந்த போது டிடிவி தினகரன் பாராளுமன்ற உறுப்பினராக வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.