Spread the love

மாமல்லபுரம் ஆகஸ்ட், 20

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட வந்து அவமதிக்கப்பட்ட நரிக்குறவ பெண் அஸ்வினி (வயது 23) சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு அந்த பெண் வசிக்கும் மாமல்லபுரம் பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்புக்கு கடந்த 2021ம் ஆண்டு வருகை தந்து அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி, அங்கு வசிக்கும் நரிக்குறவர்களுக்கு ரூ.1 லட்சம் வங்கி கடன், குடியிருப்பு கட்ட வீட்டு மனை பட்டா, பாசிமணி விற்க மாமல்லபுரத்தில் கடை ஏற்பாடு போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு சென்றார்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிவிட்டு சென்ற நலத்திட்ட உதவிகளை அதிகாரிகள் யாரும் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டதாக கூறி அஸ்வினி மற்றும் அந்த பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு, அதிகாரிகளால் தங்களுக்கு நேர்ந்த அவமானங்கள், துயரங்கள் குறித்து வீடியோவில் பதிவிட்டு அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நரிக்குறவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கிவிட்டு சென்ற நலத்திட்ட உதவிகள் ஏன் செயல்படுத்தப்படவில்லை என்பது குறித்து ஆய்வு செய்ய நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வந்தார். இது குறித்து ஆய்வு மேற்கொண்டு உடனடியாக முதல் கட்டமாக நேற்று நரிக்குறவர்கள் 8 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வங்கி கடன், 3 பேருக்கு கடற்கரை சாலையில் பாசிமணி விற்க பேரூராட்சி கடைகள் ஒதுக்கி உத்தரவிட்டு அதற்கான ஆணைகளை வழங்கி நடைமுறைப்படுத்தினார்.

இந்த ஆணைகளை பேரூராட்சி அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் சஜ்ஜீவனா, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் ஆட்சியர் ராகுல்நாத் நரிக்குறவ பெண் அஸ்வினி மற்றும் சில நரிக்குறவர்களுக்கு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *