நெல்லை ஆகஸ்ட், 12
இந்தியாவின் 75 வது சுதந்திர தினவிழா வருகிற 15 ம்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில் நெல்லை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், மார்க்கெட், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.
வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை மாவட்ட எல்லைகளில் நிறுத்தி சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோவில், பாபநாசம் பாபநாசநாதர் கோவில், நாங்குநேரி, களக்காடு, திருக்குறுங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் மற்றும் பொருட்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கொண்டும், மோப்ப நாய் மூலமும் சோதனை செய்யப்பட்டு, அதன்பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த பணியை ரெயில்வே காவலரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்களில் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலமாக ரெயில்வே காவலர்கள் சோதனை மேற்கொண்டனர். ஆய்வாளர் செல்வி தலைமையில் காவல்துறையினர் அனைத்து தண்டவாளங்களிலும் சோதனை நடத்தினர். மாவட்ட எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் உஷார் நிலையில் இருக்கவும், மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடவும் அனைத்து காவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு பணிகள் நாளை இரவு தொடங்கி 16 ம் தேதி காலை வரை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் பங்கேற்பின்றியும், கலை நிகழ்ச்சிகள் இல்லாமலும் சுதந்திர தின விழா நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா வெகுவாக குறைந்து விட்டதால் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் ஆயுதப்படை மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி கடந்த 2 நாட்களாக காவல் துறையினர் என்.சி.சி. மாணவர்கள் ஆகியோரை கொண்டு நிகழ்ச்சிக்கான ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இன்று பயிற்சி காவலர் பங்கேற்ற ஒத்திகை நடைபெற்றது.
இந்த ஆண்டு மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி, தீயணைப்பு வீரர்களின் சாகசங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மேலும் மாவட்டம் மற்றும் மாநகரில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு நற்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
சுதந்திர தினத்தன்று காலை 9 மணிக்கு ஆட்சியர் விஷ்ணு தலைமையில் தேசியக்கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
இதற்கான ஏற்பாடுகளை மாநகர காவல் ஆணையர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை காவல் ஆணையர் சீனிவாசன், அனிதா ஆகியோரின் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.