சென்னை ஜன, 29
குரூப்-3ஏ பதவிகளில் வரும் கூட்டுறவுத் துறையில் கூட்டுறவு சங்கத்தின் இளநிலை ஆய்வாளர் பணியிடங்களில் 14 இடங்களுக்கும், தொழில் மற்றும் வர்த்தக துறையில் ஸ்டோர் கீப்பர் பணியிடத்தில் ஒரு இடத்துக்கும் என மொத்தம் 15 இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டது.
இந்த தேர்வை எழுதுவதற்கு 98 ஆயிரத்து 807 பேர் விண்ணப்பித்தனர். அதாவது, ஒரு பணியிடத்துக்கு 6 ஆயிரத்து 587 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்வு நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 335 இடங்களில் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 37 இடங்களில் 10,841 பேர் எழுத இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, 15 இடங்களுக்கு 98 ஆயிரத்து 807 பேர் விண்ணப்பித்திருந்ததில், 44 ஆயிரத்து 321 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். 54 ஆயிரத்து 486 பேர் தேர்வை எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களின்சதவீதம் 44.86 ஆகும். இதன் மூலம் ஒரு பணியிடத்துக்கு 2 ஆயிரத்து 954 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் அதிகபட்சமாக சேலத்தில் 18 ஆயிரத்து 81 பேர் விண்ணப்பித்து, 8 ஆயிரத்து 140 பேரும், மதுரையில் 14 ஆயிரத்து 330 பேர் விண்ணப்பித்து 6 ஆயிரத்து 369 பேரும், சென்னையில் 10 ஆயிரத்து 841 பேர் விண்ணப்பித்து 4 ஆயிரத்து 309 பேரும் எழுதியிருக்கிறார்கள்.
தேர்வு நடந்த 15 மாவட்டங்களில் விண்ணப்பித்தவர்களில் பாதி பேர் மட்டுமே தேர்வை எழுதியிருக்கின்றனர்.
இதேபோல், தமிழ்நாடு பொது துணைநிலை சேவைகள், பொது சுகாதார துணைநிலை சேவைகளின் கீழ் வரும் உதவி புள்ளியியல் ஆய்வாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், புள்ளியியல் தொகுப்பாளர் பணியிடங்களில் காலியாக இருக்கும் 217 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதில், 35 ஆயிரத்து 286 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான தேர்வு இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 126 மையங்களில் நடக்கிறது.