செங்கல்பட்டு ஜன, 28
ஊரப்பாக்கம் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி தலைவர் பவானி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், குப்பைகளை நிரந்தரமாக அகற்றுவதற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாகவும் எனவே அனைத்து பகுதியும் குப்பை இல்லா ஊராட்சியாக விளங்கும் என்றும் தலைவர் பவானி கார்த்திக் தெரிவித்தார்.
மேலும் வண்டலூர் கிராம சபை கூட்டம் ஓட்டேரி விரிவு பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தலைவர் முத்தமிழ் செல்வி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி 1-வது வார்டு, 2-வது வார்டு பொதுமக்கள் கையில் பதாகையுடன் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காயரம்பேடு ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகாந்தி தலைமையில் நடந்தது. இதில் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி மேலாளர் அர்ச்சனா கலந்து கொண்டார். துணைத் தலைவர் திருவாக்கு மற்றும் 4 வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.