சிவகங்கை நவ, ,23
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பகுதியில் வசிப்பவர் சூசை அருள். இவரது மனைவி அன்னம்மாள் மேரி. இவரது வீடு ராம்நகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எதிர்ப்புறம் உள்ளது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஒருவர் அமெரிக்காவிலும், மற்றொருவர் கோவையிலும் வசித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த அன்னம்மாள் மேரி தனியாக வசித்து வருகிறார். அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். அவர் இன்று காலை 4 மணியளவில் தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் தேவகோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் துணைக் காவல் கண்காணிப்பாளர் கணேஷ்குமார், ஆய்வாளர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் இருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள எல்.சி.டி.டி.வி. திருடப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் உட்புறம் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடந்தன. ஆனால் அதில் நகைகள்-பணம் எதுவும் வைக்கப்படாததால் கொள்ளையர்கள் டி.வி.யை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். சிவகங்கையில் இருந்து கைரேகை நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேககைளை பதிவு செய்தனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை காவல்துறையினர் கைப்பற்றி பார்வையிட்டு வருகின்றனர்.