கோயம்புத்தூர் நவ, 17
கிணத்துக்கடவு தொடர் விலை வீழ்ச்சியால் விரக்தி அடைந்து, தக்காளிகளை விவசாயிகள் குப்பையில் கொட்டினர்.
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் தக்காளி விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக கிணத்துக்கடவு, வடபுதூர், கல்லாபுரம், சொக்கனூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது விளைச்சல் அதிகரித்து உள்ளதால், கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக 8 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போனது. இது மாத தொடக்கத்தை விட ஒரு கிலோவிற்கு 3 ரூபாய் 50 காசு குறைவு ஆகும். இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் விரக்தி அடைந்த ஒரு சில விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த தக்காளிகளை சந்தை வளாகத்தில் உள்ள குப்பை கிடங்கு பகுதியில் கொட்டிவிட்டு சென்றனர். சிலர், தக்காளிகளை திரும்ப எடுத்து சென்றனர்.