சென்னை நவ, 14
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகள் மேல் கொண்ட மாறாத அன்பின் நினைவாகவும், குழந்தைகள் அவர் மீது கொண்ட நேசத்தின் அடையாளமாகவும், அவருடைய பிறந்த நாளான நவம்பர் 14-ம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
குழந்தைகளுக்கான உரிமைகள் பொதுவானவை. அனைத்துக் குழந்தைகளுக்கும் அவற்றை உரித்தாக்க, தமிழ்நாடு அரசு இந்தக் குழந்தைகள் நாளில் உறுதி ஏற்கிறது.
குழந்தைகள் எதிர்கால தூண்கள் என்பதை கருத்திற்கொண்டு. கிராமப்புறக் குழந்தைகள், நகர்ப்புறக் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி, சமமான வாய்ப்பு பெற்று, ஒளிமயமான வாழ்வினைப் பெற்றிட சிறந்த கல்வி, சமுதாய, பொருளாதார கட்டமைப்பை உருவாக்குவதே இந்த அரசின் குறிக்கோளாகும். இளம் சிறார்கள் அனைவருக்கும் என் குழந்தைகள் நாள் வாழ்த்துகள். “குழந்தைகளைப் போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.