அரியலூர் நவ, 6
பார்த்தீனியம் என்னும் களைச்செடி 1950-ம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யப்பட்டபோது இலவச இணைப்பாக இந்தியாவிற்குள் ஊடுருவி வேர் ஊன்றியது. படிப்படியாக நாடு முழுவதும் பரவி அனைத்து பகுதிகளிலும் வளர்ந்துள்ளது. கருவேல மரங்களை அழிக்க முயன்றாலும், மீண்டும் மீண்டும் அவை வளர்வதுபோல், பார்த்தீனியம் செடியும் மிக எளிதாக பரவி வளரக்கூடிய தன்மையை கொண்டுள்ளது. பார்த்தீனியம் செடி அடிப்படையில் களைச்செடியாக அறியப்பட்டாலும், பல வகையான கேடுகள் நிறைந்த செடியாக அறிவியலாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது பார்த்தீனியம் செடியை உட்கொள்ளும் கால்நடைகள் மூலம் பெறப்படும் பாலை குடிப்பதால் மனிதர்களுக்கு செரிமான ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த செடியின் இலைகள் மனிதர்கள் மீது படும்போது அரிப்பு மற்றும் தோல் தடிப்பு போன்ற சரும நோய்கள் ஏற்படும்.
மண் வளத்தை பாதிக்கும் குறிப்பாக பொன் விளையும் பூமியாக இருக்கக்கூடிய விளை நிலங்களின் மண் வளத்தை பாதிக்கக்கூடிய களைச்செடியாக பார்த்தீனியம் உள்ளது. பார்த்தீனியம் செடிகளை முற்றிலும் ஒழிக்க மாவட்ட நிர்வாகம் சரியான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தி மண்வளத்தையும், மனித வளத்தையும் காக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது