சென்னை அக், 31
அனைத்துத் தரப்புச் செய்திகளையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர், அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் செய்தி முகமைகள் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் சண்முகம், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன் கலந்து கொண்டனர்.