சென்னை அக், 30
பிறப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் 1908ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி பிறந்தவர் முத்துராமலிங்கத் தேவர்.
இவர் உக்கிரபாண்டி, இந்திராணி தம்பதிக்கு ஒரே மகன் ஆவர் 6 மாத கைக்குழந்தையாக இருந்தபோது தாயை இழந்தார். உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் அரவணைப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுபட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார் முத்துராமலிங்கத்தேவர் .
அப்போது கமுதியை சேர்ந்த ஆயிஷா பேபி என்ற தாயாரிடம் பால் குடித்து வளர்ந்திருக்கிறார் முத்துராமலிங்கத்தேவர். அந்த தாயாரை அவர் ஒருபோதும் மறந்ததில்லை.
கல்வி மற்றும் இளமை பருவம்:
இளம் பருவத்தில் வேளாளர் குடும்பத்தில் பிறந்த குழந்தை சாமி என்பவரால் கல்வி பயிற்றுவிக்கப்பட்டார்.
ஆரம்பக் கல்வியை கமுதி கிறிஸ்தவப் பள்ளியில் படித்தார், உயர்நிலைக் கல்வியை திருப்பரங்குன்றம் அருகேயுள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியிலும் மதுரை யூனியன் கிறிஸ்தவப் பள்ளியிலும் பயின்றார் சிறுவயது முதலே தமிழில் தீராத பற்றுக் கொண்டிருந்தார் முத்துராமலிங்கத்தேவர்.
பள்ளிக் கல்வியுடன் குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், சிலம்பம் போன்றவற்றைக் கற்றுக் கொண்டார். தண்ணீரில் மிதப்பது அவருக்குக் கைவந்த கலையாகும்.
இதற்கென தீவிர மூச்சுப் பயிற்சிக்கு மேற்கொண்டிருக்கிறார் 13 வயதில் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மதுரை மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் மயக்கமருந்து இன்றி நடைபெற்ற சிகிச்சையின்போது சிறுவனாக இருந்த முத்துராமலிங்கம் காட்டிய மன வலிமையைக் கண்டு மருத்துவர்கள் வியந்தார்கள்.
வீரமான இளைஞன் என்று அவரை ஒரு மருத்துவர் பாராட்டியுள்ளார். உடல்நல பாதிப்பால் பள்ளிப் படிப்பைத் தொடர்வதில் சிக்கல் உண்டானது.
அவரது தந்தை உக்கிரபாண்டி 1939 ஆம் ஆண்டு ஜூன் 6ம் தேதி காலமானார்.
அரசியலில் ஆர்வம்:
1927 குடும்பச் சொத்து வழக்கு தொடர்பாக சென்னை சென்ற அவர் பிரபல காங்கிரஸ் பிரமுகரும் முன்னணி வழக்கறிஞருமான சீனிவாசனை சந்தித்தார்.
அவர் சென்னையில் நடந்து கொண்டிருந்த அகில இந்திய காங்கிரஸ் காரியக் கூட்டத்திற்கு முத்துராமலிங்கத் தேவரை அழைத்துச்சென்றார் சிறப்பு பார்வையாளர் பகுதியில் அமர வைக்கப்பட்டார்.
சீனிவாசனின் எழுச்சிமிகு உரையையும் சுபாஷ் சந்திரபோஸின் உணர்ச்சிமிகு உரையையும் கேட்டு வியந்தார்.
இதனால் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள தீர்மானித்தார்.
அப்போது தொடங்கியது அவரது அரசியல் பயணம் தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக காணிக்கையாக்கினார்.
அன்று முதல் விலை உயர்ந்த ஆடைகளை உடுத்துவதை நிறுத்திக்கொண்டார் தூய கதர் ஆடைகளை விரும்பி அணிய தொடங்கினார் முழுமையான காங்கிரஸ்காரராக மாறினார்.
முத்துராமலிங்க தேவரின் முதல் அரசியல் வெற்றி:
1935 -36ல் நடந்த தலைவர் தேர்தலில் தனது சகாவான பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார் காந்திஜி, அவரை எதிர்த்து போட்டியிட்ட நேதாஜிக்கு ஆதரவாக களத்தில் இறங்கினார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் .
தேர்தலில் நேதாஜி வெற்றி கண்டார், இந்நிலையில் நேதாஜிக்கு அதிக வாக்குகள் கிடைத்த மாநிலம் தமிழகம்தான். 1936ம் ஆண்டில் விருதுநகர் நகராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட காமராசரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
வரி செலுத்துவோர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதிமுறை இருந்ததே அதற்குக் காரணம்.
தகவலறிந்த முத்துராமலிங்க தேவர் விருதுநகர் சென்று காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாளை சந்தித்தார், அவரது பெயரில் உள்ள வீட்டை காமராசர் பெயருக்கு மாற்றி தருமாறு கேட்டுக் கொண்டார்.
தனது பெண் குழந்தைகளின் எதிர்காலம் கருதி வீட்டை காமராசர் பெயருக்கு மாற்றித் தர மறுத்துவிட்டார் அவரது தாயார் சிவகாமி. சில ஆடுகளை விலைக்கு வாங்கி காமராஜர் பெயரில் சொத்து ஆக்கி அவற்றிற்கு காமராஜர் பெயரில் வரி கட்டிய ரசீதை பெற்று வாக்கு செலுத்தும் தகுதியை பெற்றுக்கொடுத்தார் காமராசருக்கு.
அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தார். அதன்பிறகு விருதுநகர் நகராட்சித் தலைவர் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார் காமராசர்
ஆலய நுழைவுப் போராட்டம்:
1938-ல் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆலய நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார் காந்தியடிகள் அப்போது கமுதியில் உள்ள தனது சமூகத்தினருக்கு உட்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை அழைத்துச் சென்று ஆலயப் பிரவேசம் நடத்தினார் முத்துராமலிங்கத் தேவர்.
அதன் தொடர்ச்சியாக அரங்கேறியது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரவேசம் அந்தக் கோயிலுக்குள் தலீத்துகளை அழைத்துச் செல்ல முடிவு செய்திருந்தார் வைத்தியநாதன்.
இதற்கு கடும் எதிர்பு எழுந்தது. அப்போது நடைபெற்ற ஆலயப் பிரவேச குழுக் கூட்டத்தில் முத்துராமலிங்கத் தேவரும் பங்கேற்றார், அதில் துண்டு பிரசாரம் ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் எந்த பிரச்சனையும் இல்லாமல் நான் பார்த்துக்கொள்கிறேன் தலித் மக்களுக்கு தேவையான பாதுகாப்பை எனது மக்கள் தருவார்கள் பிரச்சனையை எழுப்ப நினைக்கும் சமூக விரோதிகளை எச்சரிக்கிறேன்.
ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அந்த கும்பலை நானே சந்திப்பேன் என்று பதிலளித்தார்.
அதன்படி 1939இல் கக்கன், முருகானந்தம், சின்னையா மற்றும் பூதலிங்கம் உள்ளிட்டோர் வைத்தியநாத ஐயருடன் இணைந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைந்து அம்மனை வணங்கினர்.
மதுரை மகாலட்சுமி மில் ஊழிகளின் கூலி உயர்வு, பெண் ஊழியர்களின் பிரசவகால ஊதியத்துடன் கூடிய விடுப்பு ஆகியவை குறித்து முதன் முதலாக குரல் கொடுத்தவர் முத்துராமலிங்க தேவர் தான்.
இவர்களின் தேவை கருதி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பை உருவாக்கினர். இந்த பிரச்சனைக்காக போராட்டம் நடந்தபோது முத்துராமலிங்கம் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தது அரசு.
முத்துராமலிங்கத்தேவரின் சிறை வாழ்க்கை:
இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து தீவிர தேசபக்தர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு.
நேதாஜி வீட்டுக்காவலில் வைக்கபட்டார் முத்துராமலிங்க தேவர் மத்தியபிரதேச சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்து தப்பிய நேதாஜி இந்திய எல்லைகளை கடந்து சென்றுவிட பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த நிலையில் சில ஆண்டுக்கு பிறகு சிறையிலிருந்து வெளியே வந்தார் முத்துராமலிங்கத்தேவர்.
மீண்டும் முத்துராமலிங்க தேவரின் அரசியல் வருகை:
1952 இல் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அதில் அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி கண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது அதில் முத்துராமலிங்க தேவர் நிறுத்திய வேட்பாளர் சசிவர்ணம் அமோக வெற்றி பெற்றார்.
பிறகு பசும்பொன் பெருமகனார் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றிருந்த வேளையில் ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒருவித பதற்றம் ஏற்பட்டது.
இதுவே பின்னர் கலவரமாக வெடித்தது இரு வேறு சமூகத்திற்கு இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டது இந்த கலவரம் அன்றைய ஆட்சியாளர்களுக்கு பெரும் களங்கம் ஏற்படுத்தும் செய்தி கேட்டு உடனே தமிழகம் திரும்பினார் பசும்பொன் முத்துராமலிங்கம்.
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை தேவை என்று வேண்டுகோள் விடுத்தார். பின்னர் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் அனைத்து சமூக இணக்கமாக வாழ்வது என முடிவெடுக்கப்பட்டது.
அந்த சமயத்தில் காங்கிரசுக்கு மாற்றாக ஜனநாயக காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. இதையொட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில் கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய பசும்பொன்-முத்துராமலிங்க தேவர் தலித் மக்கள் மீது எவனொருவன் தாக்குதல் தொடுத்தால் எனது இருதயத்தைப் பிளந்து அதில் வழிகின்ற ரத்தத்தை குடித்த பாவத்தைச் செய்ததாக கருதுகிறேன், என்று உணர்ச்சிப் பிழம்பாக உரையாற்றினார்.
கூட்டம் முடிந்து அவர் மதுரை கோரிப்பாளையம் அருகில் காரில் வந்தபோது வழிமறித்து காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. வேலூர் மற்றும் சென்னை சிறைகளில் மாற்றி மாற்றி அடைக்கப்பட்டார்.
அவர் மீது திடீரென வழக்கு பதிந்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது என விமர்சித்து ஃபார்வேர்டு பிளாக் கட்சி.
விசாரணையின் முடிவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குற்றமற்றவர் என தீர்ப்பளித்தார் நீதிபதி அனந்தநாராயணன்.
இதனால் 1959இல் சிறையில் இருந்து விடுதலையான இடைவிடாத உழைப்பின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிறிது காலம் பொது வாழ்க்கையில் இருந்து விலக நேரிட்டது.
முத்துராமலிங்க தேவரின் மறைவு:
1962 தேர்தலில் வெற்றி வசமான போதிலும் உடல்நலக்குறைவால் நாடாளுமன்ற கூட்டத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை.
மதுரையை அடுத்த திருநகரில் தங்கி ஓய்வும் சிகிச்சையும் பெற்று வந்த அவரை காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றனர் .
ஆனால் 1963ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார் முத்துராமலிங்கத் தேவர் அவரின் மரணத்திற்குப்பிறகு தனது உடலை சொந்த ஊரான பசும்பொன்னில் தான் அடக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
அதன்படி மறுநாள் உடல் அங்கு கொண்டு செல்லப்பட்ட உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் யோகிகள் அடக்கம் செய்யப்படும் முறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது .
பசும்பொன் முத்துராமமலிங்க தேவரின் கொள்கைகளை என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ள உதவுவது தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்கிற அவரது முழக்கம் தான்…