திருவண்ணாமலை அக், 25
திருவண்ணாமலை மாவட்டத்திலேயே வருவாய் மிக்க நகரமாக ஆரணி நகராட்சி விளங்கி வருகிறது. இங்கு வருவாய்மிக்க தொழிலாக நெல், அரிசி வியாபாரம், அரிசி உற்பத்தி, பட்டு சேலை தயாரிப்பு ஆகியவை பிரதான தொழிலாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களில்இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆரணி நகருக்கு தினசரி ஆயிரக்கணக்கான வியாபாரிகள், மக்கள் வருகை தரும் வர்த்தக தலமாக ஆரணி திகழ்ந்து வருகிறது.
ஆரணி நகரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் செயல்படுகின்றன. இரு பேருந்து நிலையங்களிலும் உள்ள கடைகளில் போதிய விற்பனையாகாததால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டே காணப்படுகிறது.
மேலும் ஆரணி பேருந்து நிலையத்தை அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும் என்பதே ஆரணி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. சமூக ஆர்வலர்களும் அதையே எதிர்பார்க்கின்றனர்.
எனவே பேருந்து நிலையங்களில் செயல்படும் கட்டண கழிப்பறைகளையும் இலவச கழிப்பறை நிலையங்களாக மாற்ற வேண்டும். கடைகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு ஆரணி நகராட்சி நிர்வாகம் உரிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.