கோயம்புத்தூர் அக், 24
கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு, காரின் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த நபர் உயிரிழந்த நிலையில், விசாரணைக்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழக காவல்துறை காவல் தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், கார் வெடிவிபத்தில் இறந்தவர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. ஏற்கனவே அவரிடம் 2019ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியதும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.
பின்னர் ஜமேசாவின் வீட்டில் காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட், சல்ஃபர் உள்ளிட்ட நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், விபத்துக்குள்ளான கார் இதுவரை 9 பேரிடம் கைமாறியுள்ளது என்றும் குறிப்பிட்டார். சந்தேக மரணம், வெடிமருந்து சட்டம் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாகவும் காவல் தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு கூறினார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.