கள்ளக்குறிச்சி அக், 21
ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சுந்தரேஷபுரத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு நீரேற்று நிலையங்கள் மூலம் தியாகதுருகம் பேரூராட்சி, கள்ளக்குறிச்சி நகராட்சி, சின்னசேலம் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி அருகே மாடூரில் அமைந்துள்ள நீரேற்றும் உந்து நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் நேரில் பார்வையிட்டு அங்குள்ள மின்மோட்டாரை ஆய்வு செய்து அதன் செயல்பாடுகள் குறித்தும், தண்ணீரின் அளவு பராமரிக்கும் முறை பற்றி துறை அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் செல்லும் குழாய்கள், உந்து நிலையங்களிலுள்ள மின் மோட்டார்கள் உள்ளிட்டவைகளில் பழுது ஏற்பட்டால் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் தங்கம், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் ஆனந்தன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.