கடலூர் அக், 21
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாளில் மக்கள் புத்தாடை உடுத்தி, பலகாரம் உண்டும்,பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற 24 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதாவது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், கடலூரில் தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது.
கடலூர் மாநகரில் இம்பீரியல் சாலை, லாரன்ஸ் சாலையில் உள்ள கடைகளில் தீபாவளி பண்டிகைக்கு தேவையான துணிமணிகள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் நேற்று காலை முதல் இரவு வரை கடலூர் மாநகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் கூட்டம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால், ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.