கோயம்புத்தூர் அக், 17
வால்பாறையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, கடந்த மாதம் 2-வது வாரத்தில் இருந்து நின்று விட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திடீரென பலத்த மழை பெய்தது.
தொடர்ந்து விட்டு விட்டு பல்வேறு எஸ்டேட் பகுதியிலும் மழை பெய்தது. வெள்ளம் புகுந்தது இந்த மழை காரணமாக வால்பாறை நகரின் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நகராட்சி மார்க்கெட் பகுதிக்கு செல்லும் படிக்கட்டிலும் வெள்ளம் புகுந்து பாய்ந்தோடியது. தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு நேற்று வீடுகளுக்கு வேண்டிய பொருட்கள் வாங்க வந்தவர்கள் கனமழை காரணமாக குடைகளை பிடித்துக்கொண்டு சிரமத்துடன் நடந்து சென்றனர்.
மேலும் வாரத்தின் இறுதி நாளாக இருந்ததால் வால்பாறை பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் கனமழை காரணமாக எங்கும் செல்ல முடியாமல் திரும்பி சென்றனர். தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் பட்டாசு வியாபாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்துடன் வியாபாரிகள் இருந்து வருகின்றனர்.