கோயம்புத்தூர் அக், 5
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பொங்காளியூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகளுக்கு பேரூராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்கிடையில் சிலர் வீடுகளில் உள்ள குழாயில் மோட்டார் அமைத்து குடிநீரை ஊறிஞ்சு எடுப்பதாக தெரிகிறது. இதனால் மற்ற வீடுகளுக்கு குறைவான அளவே குடிநீர் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பேச்சுவார்த்தை இந்த நிலையில் குடிநீர் பிரச்சினையை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சிலர் மோட்டார் வைத்து ஊறிஞ்சு எடுப்பதால் மற்ற வீடுகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்வதில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள், இதுகுறித்து உரிய ஆய்வு செய்து குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.