சிவகங்கை ஆகஸ்ட், 3
காரைக்குடி அமராவதி மகாலில் இந்திய மருத்துவக் கழகம் காரைக்குடி கே.எம்.சி. கிளையின் சார்பில் மூத்த டாக்டர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு இந்திய மருத்துவக்கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜெயலால் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர் டாக்டர் கனகசபாபதி முன்னிலை வகித்தார்.
மேலும் தமிழ்நாடு கிளையின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் சிங்காரவேல், முன்னாள் மாநில செயலாளர் டாக்டர் ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டாக்டர் காமாட்சி சந்திரன் உள்ளிட்ட 33 டாக்டர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் 150-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இந்திய மருத்துவக் கழக காரைக்குடி கே.எம்.சி. கிளையின் சார்பில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது. அதனையொட்டி முதற்கட்டமாக கிளை தலைவர் டாக்டர் சந்திரசேகர் முதல் மரக்கன்றை நட்டார். ஐ.எம்.ஏ. காரைக்குடி கிளை செயலாளர் டாக்டர் குமரேசன் நன்றி கூறினார்.