Spread the love

புதுடெல்லி செப், 28

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய அரசு, பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது.

அதே நேரம் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலவரங்களை தூண்டி வருவதாக குற்றம்சாட்டி அவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் கடந்த 22 ம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள். இதனை அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், மதசார்பற்ற இயக்கங்களும் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து நாடு முழுவதும் அந்த அமைப்பும், எஸ்.டி.பி.ஐ, இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கேரளாவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் நேற்று மீண்டும் காவல்துறை சோதனை நடத்தியது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ. நிர்வாகிகள் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டது.

நேற்று நடைபெற்ற சோதனைக்கு பின்னர் நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து இருக்கிறது.

மேலும் இந்தியாவில் மழை, புயல், வெள்ளம் மற்றும் கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் இந்த அமைப்பு பொதுமக்களுக்கு சாதி மத வேறுபாடின்றி பலவகையான உதவிகளை செய்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்து மத்திய அரசு தடை விதித்த இந்த உத்தரவு அரசியல் காழ்ப்புணர்ச்சியாக இருக்கலாம் என மக்கள் தரப்பில் பேசப்படுகிறது.

இருப்பினும் இனி வரும் அவசர காலங்களில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போல் ஏதேனும் அமைப்பு செயல்படுமா?? பாரபட்சமின்றி பொதுமக்களின் தேவைகள் நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *