Spread the love

தஞ்சாவூர் செப், 28

கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு கும்பகோணம் கோட்டாட்சியர் லதா தலைமை தாங்கினார். தாசில்தார் தங்க பிரபாகரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப்பக்கழக துணை மேலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர விமலநாதன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கடந்த ஆண்டு சம்பா, தாளடி, கோடை நெல் பயிர்களுக்கு காப்பீடு செய்து, மழை, பூச்சி, நோய் தாக்குதல், இயற்கை சீற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி இன்சூரன்ஸ் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரத்தட்டுப்பாடு சமீபத்தில் பெய்த மழையினால் கொள்ளிடம் கரையோரம் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும். கும்பகோணம், பாபநாசம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள உரத்தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். திருநாகேஸ்வரம் பகுதியில் உள்ள சர்க்கார் குளத்தில் தண்ணீர் நிரப்ப வேண்டும். வேளாண்மை பொறியியல் துறை சார்பில் கூடுதல் டிராக்டர்கள், கோனோவீடர்கள் உள்ளிட்ட நவீன எந்திரங்களை வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்க வேண்டும். இனிவரும்காலங்களில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை விவசாயிகள் விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த கோட்டாட்சியர் லதா, விவசாயிகளின் குறைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து அந்தந்த துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். முன்னதாக, இன்சூரன்ஸ் தொகை வழங்காத நிறுவனங்களை கண்டித்து விவசாயிகள் தங்களது கண்களில் கருப்பு துணியால் கட்டிக் கொண்டும், கருப்பு சின்னம் அணிந்தும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *