ராணிப்பேட்டை செப், 23
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் 288 கிராம ஊராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் காலதாமதங்கள் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அளித்த உரையில்,பிரதமர் ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டத்தில், 1,670 வீடுகளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு, இது நாள் வரையில் பணிகள் தொடங்கவில்லை. இரண்டு வாரத்திற்குள் பணிகள் தொடங்க வேண்டும். கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வாரத்திற்கு ஒரு கிராமத்திற்கு பணிகள் வழங்கப்படுகிறது. இந்த முறையை தவிர்த்து தொடர்ந்து 100 நாட்கள் பணியாளர்களுக்கு தொடர் பணிகளை வழங்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளில் விரைந்து பணிகளை தொடங்க வேண்டும் என அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, உதவி திட்ட அலுவலர் கவுரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார், ஊரக வளர்ச்சி செயற் பொறியாளர் சீனிவாசன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.