Spread the love

தஞ்சாவூர் செப், 23

மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் 17 மகளிர் குழுக்களுக்கு ரூ.46 லட்சம் கடன்உதவியை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். தஞ்சை சிந்தாமணி நியாயவிலைக்கடையில் வினியோகம் செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்தும், விற்பனை முனைய கருவியின் செயல்பாடு குறித்தும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளரும், அரசு முதன்மை செயலாளருமான ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், மத்திய கூட்டுறவு வங்கியின் மருத்துவக்கல்லூரி கிளை மற்றும் மகளிர் கிளையில் உள்ள வங்கியியல் வசதி கொண்ட வாகனத்தில் வாடிக்கையாளர்களுக்கு மைக்ரோ ஏ.டி.எம். மூலம் பெருவிரல் ரேகை கொண்டு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதை பார்வையிட்டார்.

மேலும் வங்கி கிளையில் 17 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.46 லட்சத்து 40 ஆயிரத்தையும், மத்திய கால விவசாய கடனாக கறவை மாடு வாங்க 4 பேருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தையும் வழங்கினார். இதேபோல் நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி சார்பில் 3 பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கும் கடனுதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு தஞ்சை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சென்ற முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அங்கு செயல்படும் சுயசேவை பிரிவு பல்பொருள் அங்காடி, எழுதுபொருள் அங்காடி, பண்ணை பசுமை காய்கறி விற்பனை, கூட்டுறவு மருந்தகம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் உள்பட கூட்டுறவுத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *