நாகர்கோவில் ஆகஸ்ட், 2
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.72 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாகர்கோவில் வேப்பமூடு பொதுப்பணித்துறை சாலையில் எஸ்.ஆர்.வி. மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு ரூ.72 லட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டன. இந்த கட்டிடத்தின் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. கட்டிடத்தை சென்னையில் இருந்தபடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.