Spread the love

பெரம்பலூர் செப், 11

பெரம்பலூரை சுற்றி ஏராளமான மலைக்குன்றுகளும், அவற்றில் ஏராளமான கல்குவாரிகளும் உள்ளன. கிரஷர் ஆலைகளை அதிகம் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு புளுமெட்டல் தொழில் முக்கிய காரணியாக விளங்குகிறது. புளுமெட்டல் தொழிலின் ஒரு அங்கமான பாறைகளை பக்குவப்படுத்தி வீட்டு உபயோக பாரம்பரிய பொருட்களான அம்மி, குழவி, ஆட்டுக்கல், திருகை உள்ளிட்ட பொருட்களை தயார் செய்து, விற்கும் பணியில் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பெரம்பலூரை அடுத்த எசனையில் உள்ள இரட்டைமலையில் இருந்து வெட்டி எடுக்கப்படும் சிறு பாறைகளை செதுக்கி, வீட்டு உபயோகப் பொருட்களாக செய்யும் பணியில் பரம்பரை பரம்பரையாக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பொருட்கள் ரூ.200-ல் இருந்து ரூ.2,700 வரையிலான விலையில் விற்கப்படுகின்றன. கிரைண்டர், மிக்சி போன்ற நவீன எந்திரங்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ள தற்போதைய காலத்திலும், பழமையான அம்மி, குழவி போன்ற இந்த கல்பாண்டங்களையும் பொதுமக்கள் வாங்கிச்செல்வதாகவும், இதனால் அவற்றுக்கான மவுசு குறையவில்லை என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தற்போது அம்மி-ஆட்டுக்கல் போன்றவற்றை உருவாக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் குறைந்துவிட்டனர். இனிவரும் அடுத்தடுத்த தலைமுறையில் இதுபோன்ற பொருட்களை அருங்காட்சியகத்திலேயே காணும் நிலை கூட உருவாகலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் கல்லாலான பொருட்களை செய்யும் தொழில் நலிவடைந்து வரும் சூழலில் நமது பழமையும், மரபும் மாறாமல் நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலும், கலாசாரத்தை காப்பாற்றும் வகையிலும் கற்கருவிகளை தயார் செய்யும் பணியில் எசனை உள்ளிட்ட கிராமங்களில் சில குடும்பங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *